விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே காதல் தோல்வியால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-28 20:00 GMT

பட்டுக்கோட்டை அருகே காதல் தோல்வியால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து காதலித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காதல்-திருமணத்திற்கு மறுப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை நாடார் தெருவை சேர்ந்தவர் அய்யப்பசாமி. இவரது மனைவி முருகவேணி. இவர்களது மகன் கணேஷ் குமார்(வயது 25). கடந்த 5 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வந்த கணேஷ்குமார் கடந்த 15-ந் தேதியன்று சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தான் நீண்ட நாட்களாக காதலித்த பெண் சென்னையில் வேலை பார்ப்பதாக தகவல் அறிந்து சென்னைக்கு சென்று அந்த பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் தான் வேறு ஒரு நபரை காதலிப்பதாகவும், இதனால் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கணேஷ்குமாரிடம் கூறியதாகவும் தெரிகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து ஊருக்கு திரும்பிய கணேஷ்குமார், தான் உயிருக்கு உயிராய் காதலித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதென முடிவு செய்தார். சம்பவத்தன்று மாலை ஆலடிக்குமுளையில் உள்ள டீக்கடை பின்புறம் வைத்து தென்னை மர வண்டுக்கு வைக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து உள்ளார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் கணேஷ்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

காதலி மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

இதனை தொடர்ந்து கணேஷ்குமாரின் பெற்றோர், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதில், தங்களது மகனின் சாவுக்கு காரணமான அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

அதுவரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பாக கணேஷ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்