வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபர் கைது
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வக்கீலிடம் செல்போனை பறித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னையைச் சேர்ந்த வக்கீல் தினேஷ் (வயது 28) என்பவர் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ரெயில் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் வந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தினேஷின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தினேஷ் திருவள்ளூர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட அரக்கோணம் ஏ.என். கண்டிகையை சேர்ந்த சாரதி (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சாரதி மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.