8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

காரைக்கால் அருகே 8-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டான்.

Update: 2024-05-28 05:49 GMT

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த நிரவி பகுதி திருமலைராஜன் ஆற்றுப்பாலம் அருகே உள்ளது ஒயிட் ஹவுஸ் காலனி. இப்பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி சிங்காரவேலு என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 13). 8-ம் வகுப்பு படித்து விட்டு விடுமுறையில் இருந்து வந்தான்.

இந்தநிலையில் இவன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தான். மாலையில் திடீரென மாணவனை காணவில்லை. இதனால் சந்தோசை அவனது பெற்றோர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது இரவு 7 மணி அளவில் வீட்டின் அருகே சந்தோஷ் கழுத்து உள்பட உடலில் பல இடங்களில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவனது உடலைப்பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

இதுபற்றி தகவலறிந்து நிரவி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தோஷின் பெற்றோர் புகார் தெரிவித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரும், சந்தோஷும் அந்த பகுதியில் விளையாடியது தெரியவந்தது. இதனையடுத்து விசாரிப்பதற்காக அந்த வாலிபரை போலீசார் தேடிய போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை புதுச்சேரி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மயிலாடுதுறையில் சுற்றி திரிந்தபோது சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். கைதான வாலிபரை காரைக்காலுக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்