3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று இளம்பெண் தற்கொலை

3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றதுடன் இளம்பெண்ணும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். அவருடைய கணவர் இறந்த 2-வது நாளில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது

Update: 2023-06-17 18:45 GMT

வத்திராயிருப்பு

3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றதுடன் இளம்பெண்ணும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். அவருடைய கணவர் இறந்த 2-வது நாளில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தொழிலாளி குடும்பம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஈசுவரன்(வயது 39). விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டீசுவரி(35).

இவர்களுக்கு வைத்தீசுவரி(15), காளீசுவரி (11) என்ற 2 மகள்கள். விக்னேசுவரன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உண்டு.

இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈசுவரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின்பு அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் தேறவில்ைல. கடந்த 2 மாதங்களாக படுத்த படுக்கையாக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈசுவரன் இறந்தார். இதனால் மனைவி, குழந்தைகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

விபரீத முடிவு

ஏற்கனவே மருத்துவ செலவுகளால் மிகுந்த கடனுக்கு ஆளான நிலையில், பாண்டீசுவரி மிகுந்த மனவருத்தம் அடைந்தார். 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்வது என விபரீத முடிவெடுத்துள்ளார்.

மனதை கல்லாக்கிக்கொண்டு நேற்று காலை 8 மணி அளவில் தன் 3 குழந்தைளுடன் வயலுக்கு சென்றார்.

அங்குள்ள ஒரு கிணற்றின் கரைக்கு சென்றார். அப்போது, அவருடைய மகள்கள் எதற்காக எங்களை இங்கு அழைத்து வந்தீர்கள்? என தாயாரிடம் கேட்டுள்ளனர். அவர்களிடம் பதில் கூறிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் 2 மகள்களையும் கிணற்றில் தள்ளினார்.

இதை சற்றும் எதிர்பாராத 2 சிறுமிகளும் தண்ணீரில் தத்தளித்து அலறினர். பின்னர், பாண்டீசுவரி கையில் இருந்த தனது ஒரு வயது ஆண் குழந்தையையும் கிணற்றில் தூக்கிப்போட்டார்.

தன்னுடைய அக்காள்களுடன் அந்த குழந்தையும் கிணற்றில் மூழ்கியது. உடனே பாண்டீசுவரியும் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கினார்.

4 பேர் உடல்கள் மீட்பு

அப்போது, அக்கம்பக்கத்தில் வேறு ஆட்கள் இல்லாததால் அவர்களை காப்பாற்ற இயலாமல் போனது.

சற்று நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது, தண்ணீரில் உடல்கள் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால் ஏராளமானோர் அங்கு கூடினர்.

தகவல் அறிந்து சற்று நேரத்தில் தீயணைப்பு படை வீரர்கள், வத்திராயிருப்பு போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கிணற்றில் குதித்து தற்கொலை செய்த பாண்டீசுவரி மற்றும் அவருடைய 3 குழந்தைகளின் உடல்களையும் அடுத்தடுத்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 4 பேரின் உடல்களும் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த 2-வது நாளில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று பாண்டீசுவரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்