காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
குன்னம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி மகழி (வயது 24). இவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எம்.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள் மகழியை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகழி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இந்த நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் மலர்க்கொடி மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மகழிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) பால்பாண்டி விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இளம்பெண்ணின் சாவுக்கு காரணமான சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகழியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.