மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலன் கண் எதிரே இளம்பெண் சாவு - பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றபோது சோகம்

பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றபோது தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதில் காதலன் கண் எதிரேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-19 03:13 GMT

ஆவடியை சேர்ந்தவர் அஜித் (வயது 22). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தவர் சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த செல்வி (21). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காதல் ஜோடி, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.

இதில் அஜித், செல்வி இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி, காதலன் கண் எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அஜித், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாலையில் சிறிது தூரம் ஓடிச்சென்று தடுப்பு சுவரில் ஏறி நின்றது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான செல்வி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற அஜித், பின்னால் அமர்ந்து கொண்டிருந்த காதலியின் முகத்தை பார்த்தபடி ஓட்டிச்சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்