சென்னை துரைப்பாக்கத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த என்ஜினீயர் தற்கொலை முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Update: 2023-11-11 17:30 GMT

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர், 8-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் புவனேஷ் (வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு வந்து இரவு 1.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இன்று வழக்கம்போல மதியம் 3.30 மணிக்கு பணிக்கு புவனேஷ் வந்தார். இவருடன் நாக வெங்கடசாய் என்பவர் பணியாற்றி வந்தார். இரவு 12 மணியளவில் புகை பிடிப்பதற்காக அவர் வேலை செய்யும் 10-வது மாடியில் இருந்து நண்பர் நாக வெங்கடசாய்யுடன் கீழ் தளத்திற்கு வந்தார். சிகரெட் புகைத்து விட்டு மீண்டும் மேலே வேலை செய்யும் இடத்துக்கு புவனேஷ் தனியாக சென்றார்.

சற்று நேரத்தில் யாரோ மேலிருந்து கீழே விழும் சத்தம் கேட்கவே பணியாளர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது புவனேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 10-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது தலை சிதைந்து, கைகள் உடைந்து துண்டாகி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற துரைப்பாக்கம் போலீசார் புவனேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து புவனேசின் தந்தை இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் புவனேசுக்கு சுமார் ரூ.10 லட்சம் வங்கி கடன் உள்பட மொத்தம் ரூ.30 லட்சம் வரை கடன் இருந்தது தெரிய வந்தது. மேலும் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்தது தெரியவந்தது. கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்