சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல வந்த என்ஜினீயரிடம் 'சாட்டிலைட்' போன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல வந்த சாப்ட்வேர் என்ஜினீயரிடம் இருந்து தடை செய்யப்பட்ட ‘சாட்டிலைட்’ போனை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-12 08:35 GMT

'சாட்டிலைட்' போன்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 40) என்பவர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட 'சாட்டிலைட்' போன் வைத்திருந்தது தெரிந்தது.

பறிமுதல்

அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், மேலும் அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், "நான், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றுகிறேன். கடந்த மாதம் 20-ந் தேதி அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்தேன். அப்போதே 'சாட்டிலைட்' போனை நான் எடுத்து வந்தேன். அமெரிக்கா போன்ற நாடுகளில் 'சாட்டிலைட்' போன் பயன்படுத்துவதற்கு தடை இல்லை. நான் வரும்போது சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது 'சாட்டிலைட்' போனை கொண்டு வரக்கூடாது என்று தடுக்கவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்று கூறவும் இல்லை" என்றார்.

உடனே அதிகாரிகள், "இந்தியாவில் 'சாட்டிலைட்' போனை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசின் தடையை மீறி நீங்கள் 'சாட்டிலைட்' போனை பயன்படுத்தி இருக்கிறீர்கள்?. இது சட்டப்படி குற்றம்" என கூறி அவரிடம் இருந்த 'சாட்டிலைட்' போனை பறிமுதல் செய்தனா்.

பின்னர் மேல் நடவடிக்கைக்காக அவரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் ஜனார்த்தனனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்