ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2022-12-26 18:55 GMT

ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

அமைச்சரிடம் கோரிக்கை

தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு செயலாக்கு திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் பூபதி. சிவஞானம் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் 1000 ஆசிரியர்கள் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக் கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012-ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியாற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர்.

விலக்கு அளிக்க வேண்டும்

ஆனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறை சார்ந்த அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப் படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக்கொண்டுள்ளோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி இது நாள் வரை எங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும்.

இவ்வாறு, அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்

இதேபோல் அனைத்து துறை ஊழியர்கள் ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் செயலாளர் திருமுருகன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் உதயநிதிஸ்டாலினிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளின் நிலைையயும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாவது பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்