தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்; 'அரிக்கொம்பன்' புகுந்ததாக பரபரப்பு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வாழைகளை சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவற்றுடன் ‘அரிக்கொம்பன்’ யானையும் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-18 19:25 GMT

மாஞ்சோலை:

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வாழைகளை சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. அவற்றுடன் 'அரிக்கொம்பன்' யானையும் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

அரிக்கொம்பன் யானை

கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த அரிக்கொம்பன் யானையை தேனி மாவட்ட வனத்துறையினர் பிடித்தனர்.

பின்னர் அதனை அங்குள்ள வனப்பகுதியில் விட்டால் மீண்டும் ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்தில், அதனை லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விட்டனர். அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

தொழிலாளர் குடியிருப்பில்...

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு தோட்ட தொழிலாளர்களுக்கு தனித்தனி குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அரிக்கொம்பன் யானை வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் மாஞ்சோலை அருகே நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 யானைகள் கூட்டமாக புகுந்தன. அங்கு தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள ரேஷன் கடை அருகில் உள்ள வாழை மரங்களையும் சாய்த்தன.

வனத்துறையினர் ஆய்வு

நேற்று அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நாலுமுக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து வாைழகளை சேதப்படுத்தியதை உறுதி செய்த அதிகாரிகள், அவற்றில் அரிக்கொம்பன் யானை இருந்ததா? என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.

அப்போது காட்டு யானைகளுடன் அரிக்கொம்பன் யானையும் சேர்ந்து வந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். எனினும் சக யானைகளுடன் சேர்ந்து விட்டால் அரிக்கொம்பன் யானையால் பிரச்சினை ஏற்படாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அரிக்கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ கருவியின் மூலமும் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேஷன் கடை பகுதியில் யானைகள் புகுந்து வாழைகளை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்