திருப்பூர் மாநகராட்சியில் ரூ.135½ கோடி வரி பாக்கி

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.135½ கோடி வரி பாக்கி உள்ளது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக வருகிற 17-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-14 18:29 GMT

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.135½ கோடி வரி பாக்கி உள்ளது. பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக வருகிற 17-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

வரி வசூலிப்பு மையங்கள்

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் 15 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. 4 மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிடவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம், குத்தகை இனங்கள் ஆகியவை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வசூலிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வரி வசூலிப்பு இல்லை.

மாநகராட்சி மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ, காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். எளிய முறையில் இணைதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம்.

ரூ.135½ கோடி வரி பாக்கி

2022-23-ம் ஆண்டுக்கு சொத்துவரி ரூ.92 கோடியே 16 லட்சமும், காலியிடவரி ரூ.7 கோடியே 82 லட்சமும், தொழில் வரியாக ரூ.2 கோடியே 32 லட்சமும், குடிநீர் கட்டணமாக ரூ.18 கோடியே 44 லட்சமும், குத்தகை இனத்தில் ரூ.8 கோடியும், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக ரூ.5 கோடியே 14 லட்சமும், பாதாள சாக்கடை கட்டணமாக ரூ.1¾ கோடியும் நிலுவையாக உள்ளன.

திடக்கழிவு மேலாண்மை கட்டண இனத்தில் வரி திருத்தம் செய்யப்பட்டு கேட்புகள் சரி செய்யப்பட்டு வருவதால் நிலுவை தொகையை செலுத்த வேண்டும். வருகிற 17-ந் தேதி அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. சொத்துவரி, காலியிடவரி விதித்தல் தொடர்பாகவும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்