டாஸ்மாக் ஊழியர்களிடம் தக்காளி பையை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
உடுமலை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் என நினைத்து தக்காளி பையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாஸ்மாக் ஊழியர்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). இவர் மொடக்குபட்டி- தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 1-ந்தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலை முடிந்த பின்பு தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு விற்பனையாளர் சரவணனை தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அரிவாளை காட்டி மிரட்டல்
தளி அருகே அவர்கள் சென்றபோது பின்னால் வந்த ஒரு கார் ஜெயபிரகாஷின் மோட்டார்சைக்கிள்மீது மோதியது.
அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்தக் காரில் வந்த முககவசம் அணிந்த மர்ம ஆசாமிகள் மது விற்ற பணத்தை கொடுங்கடா... என்று கூறி பீர் பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார்கள்.
அப்போது அந்த வழியாக வாகனங்கள் வருவதை பார்த்ததும் ஜெயப்பிரகாஷ் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த மர்ம ஆசாமிகள் ஜெயபிரகாஷ் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த தக்காளி பையை பணப்பை என்று நினைத்து பறித்து சென்று விட்டனர்.
டாஸ்மாக் வசூல் பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு தக்காளிப் பை தான் மிஞ்சியது. இது குறித்து ஜெயபிரகாஷ் தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.