இரும்பு கம்பியால் தாக்கி டாஸ்மாக் பார் ஊழியர் படுகொலை

இரும்பு கம்பியால் தாக்கி டாஸ்மாக் பார் ஊழியர் படுகொலை

Update: 2022-06-20 10:52 GMT

வீரபாண்டி

திருப்பூரில் இரும்பு கம்பியால் தாக்கி டாஸ்மாக் பார் ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டாஸ்மாக் பார் ஊழியர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 34). இவர் திருப்பூர்-பல்லடம் சாலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அவரது அண்ணன் நடத்திவரும் டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக திருப்பூர்-பல்லடம் சாலையில் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு, வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு மாறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் டாஸ்மாக் பாரில் இருந்து வீட்டுக்கு சென்ற கார்த்திகேயன் மீண்டும் பாருக்கு வரவில்லை. இதையடுத்து பார் ஊழியர்கள் கார்த்திகேயன் தங்கி இருந்த வீட்டிற்கு இரவு 10 மணிக்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் கார்த்திகேயன் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள் உடனடியாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கார்த்திகேயனை கொலையாளிகள் இரும்பு கம்பியால் தாக்கி கொன்று இருப்பதாக போலீசார் ெதரிவித்தனர்.

மேலும் முன்விரோதம் காரணமாக கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதும் காரணம் உள்ளதா? கொலை செய்யப்படும் முன் அவர் யார்? யாருடன் பேசினார் என அவருடைய செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருப்பூரில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---

கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன்

Tags:    

மேலும் செய்திகள்