தார் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கக்கூடாது

ராஜக்கல் பகுதியில் தார் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று கிராமமக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2023-02-15 16:46 GMT

ஊராட்சி மன்ற கூட்டம்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ராஜக்கல் ஊராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த கருணாகரன், துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த விஜயகுமார் மற்றும் 11 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை ராஜக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்குவதற்கு துணைத் தலைவர் விஜயகுமார் கையெழுத்திடவில்லை என்றும், அவரை துணைத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்தும் தலைவர் கருணாகரன் அவசர கூட்டம் நடத்தி வார்டு உறுப்பினர்களிடையே விவாதித்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த காலை 10.45 மணியளவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் கலெக்டர் வந்ததைகூட கவனிக்காமல், ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், ஊராட்சி செயலாளர் ஆகியோர் கூட்டம் நடத்துவதில் மும்முரமாக இருந்தனர்.

கூட்டம் நடத்த அனுமதியில்லை

இதனால் கோபமடைந்த கலெக்டர் ஊராட்சி தலைவர் கருணாகரன், ஊராட்சி செயலர் லட்சுமி ஆகியோரிடம் நான் வருவது உங்களுக்கு தெரியாதா, நாங்கள் விசாரணை நடத்த வந்துள்ளது கூட தெரியாதா, கூட்டம் நடத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அப்போது ஊராட்சி தலைவர் கருணாகரன் கலெக்டருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அதனை கலெக்டர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனையடுத்து கலெக்டர் தான் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஊராட்சியில் எந்த கூட்டமும் நடத்த அனுமதி கிடையாது என எச்சரித்து பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மனு அளித்திருந்த துணைத் தலைவர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதி வழங்கக்கூடாது

இதனை தொடர்ந்து அங்குள்ள நூலகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகளை சீரமைக்கவும், பழைய ரேஷன் கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் ராஜக்கல் ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.

அப்போது கிராம மக்கள் கலெக்டரை சூழ்ந்து இங்கு தார் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர். அதற்கு இப்படி தடை பண்ணினால் சுற்றுப்புற கிராமங்களுக்கு ரோடு எப்படி போடுவது, கம்பெனிகள் எப்படி வரும், கிராமங்கள் எப்படி வளர்ச்சியடையும் என கலெக்டர் கேட்டார். பின்னர் இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த சொல்லியிருப்பதாகவும், அறிக்கை வந்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

பின்னர் பேரணாம்பட்டு பங்களா மேடு பகுதியில் உள்ள புதிய பஸ் நிலைய பகுதியில் உழவர் சந்தை அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சப்-கலெக்டர் வெங்கட்ராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, சொர்ணலதா, பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்