அதிக அளவில் ரெயிலில் பயணிகள் பயணம் செய்த வகையில்திருச்சி ரெயில்வே கோட்டத்தில் 2-வது இடம் பிடித்தது தஞ்சை
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக அளவில் ரெயிலில் பயணிகள் பயணம் செய்த வகையில் தஞ்சை 2-வது இடத்தை பிடித்துள்ளது. டிக்கெட் வருவாயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. எனவே கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக அளவில் ரெயிலில் பயணிகள் பயணம் செய்த வகையில் தஞ்சை 2-வது இடத்தை பிடித்துள்ளது. டிக்கெட் வருவாயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. எனவே கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சுற்றுலா தலம்
தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளன. மேலும் தாராசுரம் ஐராவதீஸ்வர் கோவில், கல்லணை, மனோரா போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்ட பின்னர் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களாக திருச்சிக்கு அடுத்தபடியாக விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை போன்றவை விளங்கி வருகிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா குறைய தொடங்கியதையடுத்து ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் குறைந்திருந்த ரெயில் பயணிகளின் எண்ணிக்கை பின்னர் அதிகரித்து வருகிறது.
பயணிகள் எண்ணிக்கை அதிகம்
இதையடுத்து நிறுத்தப்பட்ட ரெயில்களும் படிப்படியாக இயக்கத்தொடங்கின. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கையிலும், டிக்கெட் வருவாயிலும் திருச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக விழுப்புரம் ரெயில் நிலையம் மூலம் ரூ.43.30 கோடி டிக்கெட் வருவாய் கிடைத்துள்ளது. இந்த ரெயில் நிலையம் மூலம் 26.9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக தஞ்சை ரெயில் நிலையம் மூலம் ரூ.43.16 கோடி டிக்கெட் வருவாய் கிடைத்துள்ளது. இங்கு 36 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கும்பகோணம் ரெயில் நிலையம் மூலம் ரூ.28.41 கோடியும், 19 லட்சம் பயணிகளும், மயிலாடுதுறை ரெயில் நிலையம் மூலம் ரூ.26 கோடியே 69 லட்சமும், 17 லட்சம் பயணிகளும் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் குறிப்பாக கோவை- மயிலாடுதுறை- கோவை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மன்னார்குடி- கோவை- மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதே போல் தஞ்சை வழியாக இயக்கப்படும் ரெயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?
இது குறித்து தஞ்சை ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ஜீவக்குமார் கூறுகையில், 'திருச்சிக்கு அடுத்தபடியாக தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து அதிக பயணிகள் ரெயில் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே திருச்சியில் இருந்து இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல்நேர சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்க வேண்டும். அதே போல் ஹவுரா- திருச்சி ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்.
தஞ்சை வழியாக இயக்கப்படும் வாராந்திர ரெயில்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை காலங்களில் இயக்கப்படும் ரெயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் அந்த ரெயில்களை தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை வழியாக திருப்பதிக்கு இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். தஞ்சை- திருச்சி இடையே மின்சார ரெயில்களை இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் வருவாய் இன்னும் அதிகரிப்பதோடு, பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். மேலும் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்' என்றார்.