சென்னை விமானத்தில் தஞ்சை பயணி திடீர் சாவு
மெக்காவுக்கு புனித பயணம் சென்று திரும்பியபோது நடுவானில் சென்னை விமானத்தில் தஞ்சையை சேர்ந்த பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
மீனம்பாக்கம்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது 66). இவர், புனித பயணமாக மெக்காவுக்கு குழுவாக சென்று விட்டு பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
இந்த விமானம் நேற்று அதிகாலை நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதை கண்ட சகபயணிகள் விமான பணிப்பெண்களுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான பணிப்பெண்கள், ராஜா முகமதுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுபற்றி விமானிக்கும் தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் தரைஇறங்கியது
இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, "பயணி ஒருவர் நெஞ்சு வலியால் துடித்து கொண்டு இருக்கிறார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை தயாராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விமானம் தரையிறங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் " என கூறினார்.
இதையடுத்து விமானம் வழக்கத்தைவிட 15 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 3 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனே அங்கு தயாராக இருந்த மருத்துவ குழு விமானத்துக்குள் சென்று நெஞ்சு வலியால் துடித்த ராஜா முகமதுவை பரிசோதனை செய்தனர்.
உயிரிழந்தார்
அப்போது மயங்கிய நிலையில் விமான இருக்கையிலேயே ராஜா முகமது உயிரிழந்திருந்தார். கடுமையான மாரடைப்பு காரணமாக ராஜாமுகமது நடுவானில் விமானம் பறந்து வந்தபோதே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜாமுகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்த பக்ரைனுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதில் செல்ல பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் பயணி இறந்துவிட்டதால் விமானத்தை ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். இதனால் சுமார் 3 மணிநேரம் தாமதமாக மீண்டும் பக்ரைனுக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.