குமரியில் மழை குறைந்ததால் குளமாக காட்சி அளிக்கும் குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணை;சுத்தமான குடிநீர் வழங்குவதில் பாதிப்பு

குமரியில் மழை அளவு குறைந்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணை குளமாக காட்சி அளிக்கிறது. இதனால், நகராட்சி பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-06-03 19:13 GMT

குழித்துறை, 

குமரியில் மழை அளவு குறைந்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணை குளமாக காட்சி அளிக்கிறது. இதனால், நகராட்சி பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வற்றாத ஜீவ நதி

குமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதி என குழித்துறை தாமிர பரணி ஆறு அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றை மையமாக கொண்டு பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் எப்போதும் சிறிதளவு தண்ணீராவது ஓடிக்கொண்டிருக்கும். தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் அவ்வப்போது மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்தது. அந்தமழை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து வரும் வகையில் பெய்யவில்லை. இதனால் ஆற்றில் நீர்வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது சிறிதளவு தண்ணீரே பாய்ந்து கொண்டிருக்கிறது.

அதுவும் மார்த்தாண்டம் வெட்டுமணிக்கும், குழித்துறைக்கும் இடையே தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையின் அடிப்பகுதி வரை நீர்மட்டம் தாழ்ந்து தேங்கி நிற்கிறது. தடுப்பனையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒரு மதகின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு தற்போது நீரோட்டம் இல்லாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

குடிநீரில் துர்நாற்றம்

நீரோட்டம் இல்லாததால் ஆறு அழுக்குகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உறைகிணறு அமைத்து குழித்துறை நகராட்சி பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் தடுப்பணையின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் குளிப்பதற்கும் இதர பயன்பாட்டிற்கும் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் மழை பெய்து ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே குழித்துறை நகராட்சி பகுதியில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பொதுமக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்டஅதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்