சென்னை ஐகோர்ட்டில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும்-மதுரை விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை-

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் ஆங்கிலத்துடன் தமிழ் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

Update: 2023-03-25 21:31 GMT

மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

ரூ.166 கோடியில் கோர்ட்டு கட்டிடங்கள்

நீதித்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டிட வசதிகள், மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் ரூ.166 கோடி செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன..

இந்த கட்டிடம் 3 தளங்களுடன் மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 968 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளன.

இந்த கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ முன்னிலை வகித்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

மயிலாடுதுறை கோர்ட்டுகள்

மேலும் இந்த விழாவில் இருந்தபடியே, மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ெதாடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை தலைமை குற்றவியல் கோர்ட்டை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார்.

நினைவுப்பரிசுகள்

விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜ்ஜூ உள்ளிட்டவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. வக்கீல் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா வரவேற்றுப் பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்த விழாவில் தலைமை நீதிபதிக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் விவரம் வருமாறு:-

பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன் என்று சொல்லி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட தாங்கள், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்கு தனிப்பாசம் உண்டு. கொரோனா 2-வது அலையின்போது, அதைக் கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது என்று, மருத்துவ உட்கட்டமைப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியதற்காக நான் இந்த நேரத்தில், தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தொழில்நுட்பம், பதிவகம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தாங்கள் பொறுப்பேற்றபோது சொன்னதுக்கு ஏற்ப, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, சிறப்பான தீர்ப்புகளை வழங்கி தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கக்கூடிய நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா ஆகியோருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியுடன் கூடிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மதுரை ஐகோர்ட்டுக்கு அடித்தளம்

சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு சென்னை ஐகோர்ட்டு கிளை மதுரையில் அமைந்து இருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதிதான்.

1973-ம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை அவர் நனவாக்கினார். இன்று அந்த கட்டிடம் மதுரையில் கம்பீரமாக நிற்கிறது.

நீதி நிர்வாகம், சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையிலும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை தமிழக அரசு உணர்ந்துள்ளது. அவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

44 புதிய நீதிமன்றங்கள்

இந்த அரசு பதவியேற்ற 2021-ம் ஆண்டு மே மாதம் முதல், இன்று வரையில், புதிய நீதிமன்றங்கள், தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி உள்ளோம். அதற்கு ரூ.106 கோடியே 77 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி நிலையில் கோவை, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை, காஞ்சீபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, ரூ.315 கோடி செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வக்கீல்களுக்கு உதவித்தொகை

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க ரூ.23 கோடி செலவில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுதல், குடியிருப்புகள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டிடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வக்கீல்கள் நல நிதிக்கு அரசு சார்பில் ரூ.8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வக்கீல்களுக்கான சேமநல நிதி 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வக்கீல்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3 ஆயிரம் மாதம்தோறும் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வக்கீல் எழுத்தர் நலநிதியில் இருந்து ரூ.4 லட்சம், வக்கீல் எழுத்தர் இறந்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அவற்றை பட்டியலிட்டுச் சொல்ல நேரம் இடம் தராது. எனவே, நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்று இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

3 கோரிக்கைகள்

இந்த விழாவில் 3 கோரிக்கைகளை நான் வலியுறுத்துகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலத்துடன் தமிழ் மொழியும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய சட்ட மந்திரியும் ஆதரவாகத்தான் இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றிதெரிவித்து கொள்கிறேன். இந்த கோரிக்கைக்கு தலைமை நீதிபதி ஆதரவு தர வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு கிளைகளை சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நான் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறேன். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமனியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும்.

மக்களுக்கு சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதிகள்-அமைச்சர்கள்

மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர் உள்ளிட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, கலெக்டர் அனிஷ் சேகர், சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் மற்றும் வக்கீல்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்