அரசு மரியாதையுடன் தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன் உடல் அடக்கம்
30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவ்வை நடராஜன் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.;
சென்னை,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், தமிழ் அறிஞருமான அவ்வை நடராஜன் (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் எம்.பி., அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பாண்டியராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரசு மரியாதையுடன் அடக்கம்
அஞ்சலி செலுத்த சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வை நடராஜனின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை அண்ணா நகரில் இருந்து அவ்வை நடராஜனின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலை கவிஞர் வைரமுத்து, ஜெகத்ரட்கன் எம்.பி. உள்ளிட்டோர் சுமந்தனர்.
அங்கு 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
அவ்வை நடராஜனின் மறைவையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர் எம்.பி., வி.கே.சசிகலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் முத்தரசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.