தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கடலில் நடந்த அஸ்திரதேவர் தீர்த்தவாரி உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் நடந்த அஸ்திரதேவர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
திருச்செந்தூர்,
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வழிபடுகின்றனர்.
அந்த வகையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மேளதாளம் முழங்க கடலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி உற்சவ நிக்ழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பால், மஞ்சள் உள்பட 16 பொருட்களை கொண்டு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி புத்தாடை அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.