காவல்துறையின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக வெற்றிக் கழகம்

காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு விஜய் தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-06 13:55 GMT

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தற்போது கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது. திட்டமிட்டபடி அன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி மாநாட்டை நடத்த கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீசார் கடிதம் அனுப்பினர். அதில் மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள்,

எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது, எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதி, நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை அவர் கொடுத்தார். விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்தனர்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு போலீசார் மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரபூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்