தமிழகம், புதுச்சேரியில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரியில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல 14-ந்தேதியன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.