'தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடு' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
‘தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடமாக தமிழ்நாடு இருந்து வருகிறது' என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான முன்னோட்ட அறிமுக விழா மற்றும் இலச்சினை வெளியீட்டு விழா ஆகியவை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு இலச்சினையை வெளியிட்டார்.
மரியாதை இருக்க வேண்டும்
விழாவில் அவர் பேசியதாவது:-
1996-2001-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது தான், தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் புரட்சியை அடைந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடியும், நாடியும் வந்தது.
இன்றைய தினம் சென்னையை சுற்றி காஞ்சீபுரத்துக்கோ - சோழிங்கநல்லூருக்கோ - ஸ்ரீபெரும்புதூருக்கோ - ஒரகடத்துக்கோ நீங்கள் சென்றால், பார்க்கக் கூடிய பல தொழிற்சாலைகள் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவைதான்.
முதலீடுகள் சாதாரணமாக வந்துவிடாது. ஒரு ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். சட்டம், ஒழுங்கு முறையாக இருக்கவேண்டும். இவ்வளவும் இருந்தால்தான் முதலீடுகள் செய்ய முன் வருவார்கள்.
முதலீடுகள் குவிகிறது
2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது என்றால், இந்த மாற்றங்களின் காரணமாகத்தான்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 241 முதலீட்டு கருத்துருக்கள் மூலம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். 4 லட்சத்து 15 ஆயிரத்து 282 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். நமது மாநிலத்தின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடையும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் 'த' என்ற எழுத்து, தமிழ் எழுத்தின் அடையாள பிரதிபலிப்பாக வடிவமைத்திருக்கிறோம். தாய் தமிழ் மொழி தான், தமிழ்நாட்டை தாங்கிடும் தூண். எனவே தான், இலச்சினையில் 'த' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.
ஊக்குவிக்க வேண்டும்
இலச்சினையே நமது இலக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. தொழில்துறை கூட்டமைப்பினர் தமிழ்நாட்டின் விளம்பர தூதராக மாறி, முன்னணி நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கவிக்க வேண்டும்.
வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள். முதலீட்டின் மூலமாக தமிழ்நாடும் வளரும். உங்களது நிறுவனமும் வளரும். இந்திய அளவில், தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
சிறந்த இடம் தமிழ்நாடு
தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயர்தர குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சூழலை தமிழ்நாடு கொண்டுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடம் தமிழ்நாடு தான். எனவே, அனைத்து நிறுவனங்களையும் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நினைவுப்பரிவு வழங்கினார். விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் அருண்ராய், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சருக்கு 'டெஸ்ட்' வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 'டெஸ்ட்' வைத்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதாவது முதல்-அமைச்சர் பேசும் போது, 'தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜா மிகத் திறமையாக இந்தத் துறையை வழிநடத்தி வருகிறார். அவர் நடத்த இருக்கிற உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது அவருக்கு நான் வைக்கக்கூடிய 'டெஸ்ட்'.
எந்த டெஸ்ட் வைத்தாலும், அவர் முதலிடத்தில் வருவார். அத்தகைய வேகம் கொண்டவர் அவர். 2024 ஜனவரியில் நடத்தவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, 'இதுவரை இவ்வாறு எங்குமே நடந்ததில்லை' என்று பார் புகழும் அளவுக்கு நடத்த வேண்டும்' என்றார்.