அரிசி ஏற்றுமதி தடையால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை
அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையால் தமிழகத்தில் அரிசி ஆலைகளுக்கு பாதிப்பு இல்லை என அரிசி ஏற்றுமதி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையால் தமிழகத்தில் அரிசி ஆலைகளுக்கு பாதிப்பு இல்லை என அரிசி ஏற்றுமதி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
ஏற்றுமதிக்கு தடை
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த ஜூலை 22-ந் தேதி முதல் பாசுமதி ரக அரிசி அல்லாத பிறரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ஆனால் இந்த தடையானது தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் தமிழகத்திலிருந்து புழுங்கல் அரிசி தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதுண்டு.
காரணம் வெளிநாடு வாழ் தமிழர்கள் புழுங்கல்அரிசியை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பச்சரிசி என்பது ஏதாவது விசேஷ காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் ரஷ்யா, உக்ரைன் பிரச்சினைக்கு பிறகு கோதுமை தட்டுப்பாடு காரணமாக கோதுமையை பயன்படுத்தி வந்தவர்களும் அரிசி உணவுக்கு மாறி விட்ட நிலையில் புழுங்கல் அரிசி பயன்பாடு தான் வெளிநாடுகளில் அதிகம் உள்ளது.
விலை உயர்ந்தது
இந்தநிலையில் மத்திய அரசு தடை விதித்ததால் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பகுதிகளில் தான் அரிசி விலை உயர்ந்தது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் அடுத்த நெல் அறுவடை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் நடைபெறும். ஆதலால் நவம்பர் மாதத்தில் தான் வழக்கமாக அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்படும். தமிழகத்திலிருந்து கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் 0.5 சதவீதம் தான் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.23 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்த நிலையில் தமிழகத்திலிருந்து ரூ.113 கோடி அளவில்தான்அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. மேலும் தேவைப்பட்டால் பாசுமதி ரக அரிசி அல்லாத அரிசியையும் புழுங்கல் அரிசியாக மாற்றி ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
முறையீடு இல்லை
இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரி கூறுகையில், தமிழகத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி தடையை மத்திய அரசு விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எதுவும் எழவில்லை.
ஏனெனில் தமிழகத்தில் அரிசி ஆலைகளுக்கு இந்த தடை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மேலும் இந்த தடை நீட்டிக்கப்பட்டாலும் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.