பா.ஜனதா ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது-திருச்சியில் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பா.ஜனதா ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
பா.ஜனதா ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி நடைபயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற 7-ந்தேதி இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்குகிறது.
இந்த பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது குறித்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகம் புறக்கணிப்பு
கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். மாநில தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களும் முக்கியம், தனியார் துறையும் முக்கியம். கலப்பு பொருளாதாரம் தான் நாட்டை உயர்த்தும். பா.ஜனதா ஆட்சியில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள்.
வெற்றி பெறுவோம்
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்லும் போது விஷத்தை கக்கி விட்டு தான் செல்வார்கள். அதுபோல குலாம்நபி ஆசாத்தும் பேசி உள்ளார். மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காங்கிரசை வழிநடத்தினார். அதுபோல ராகுல்காந்தியும் தேவைப்பட்டால் வருவார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. மீண்டும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
விவசாய காப்பீட்டு திட்டம்
பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதி விவசாயிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். அந்த திட்டம் தோல்வி தான். சென்னையில் எங்கு விமான நிலையம் வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு தான். விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது குறைந்தபட்சம் 20 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.