தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறியுள்ளது -அண்ணாமலை பேச்சு

தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி உள்ளது என்று் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

Update: 2023-07-24 00:06 GMT

சென்னை,

தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தவறியது, மின் கட்டணம், சொத்துவரி, வாகன பதிவு கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழிங்கநல்லூரில் 198-வது வார்டில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தி.மு.க.வுக்கு எதிராக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

பூஜ்ஜியம் மதிப்பெண்

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியுள்ளது. பாதி ஆட்சிக்காலம் தி.மு.க. அரசுக்கு முடிந்துள்ளது. இவர்களது ஆட்சியை மதிப்பீடு செய்து பார்த்தால், பூஜ்ஜியத்துக்கும் குறைவான 'நெகட்டிவ்' மதிப்பெண்கள் தான் கொடுக்க முடியும். தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் லஞ்சம் தான் காணப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என சொன்ன பிறகும் தி.மு.க. அரசு அதை எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் 3 முறை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இவர்களுடைய நோக்கம் பிரதமருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் வந்தாலும், அது பொதுமக்களுக்கு சென்று சேரும் போது ஊழலுடன் சென்று சேருகிறது. எங்களுடைய ஆர்ப்பாட்டம் தி.மு.க. அரசின் காதுகளுக்கு கேட்கும் என்று நம்புகிறோம்.

மணிப்பூர் பிரச்சினை

தூங்கிக்கொண்டிருந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின், திடீரென விழித்துக்கொண்டு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டு 210 நாட்கள் ஆகிறது. அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மணிப்பூர் பிரச்சினையை மத்திய அரசும், மணிப்பூர் அரசும் சரி செய்யும். பெண்களுக்கு எதிரான கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தருவோம் என அம்மாநில முதல்-மந்திரி உறுதியாக தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் மணிப்பூர் அமைதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

தேச விரோதிகள்

மணிப்பூரில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெரியும். எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்றுத்தர அவர் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை என்பது புதிது கிடையாது. தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறியுள்ளது. இதேபோல, நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி எங்கு போட்டியிட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சி.

குறிப்பாக, தமிழகத்தில் அவர் போட்டியிட்டால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பிரிவினைவாதம் பேசியவர்கள், காஷ்மீர், இந்தியாவுடன் இல்லை என்று கூறியவர்கள், தேசத்துக்கு எதிராக கோஷம் போட்டவர்கள் ஒன்றாக ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு 'இந்தியா' என்று கூறிக்கொண்டால் மக்கள் நம்பி விடமாட்டார்கள். மகளிர் உரிமை தொகைக்கு இப்போது தான் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. எங்களது வலியுறுத்தல் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை 27 ஆயிரம் ரூபாயை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு இடங்களில்...

இதேபோல, சென்னையில் கோட்டூர்புரத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மேற்கு மாம்பலத்தில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோடம்பாக்கம் டிரஸ்டு புரம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், தியாகராய நகரில் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், 'விலைவாசி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் வயிறு நிறைய சாப்பிட முடியவில்லை. அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலை மாற வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம் தான். கூடிய விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்' என்றார்.

திருவொற்றியூர்

இதேபோல் திருவொற்றியூர் கிளாஸ் பேக்டரி அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளத்தூர் பாலாஜி நகர் சந்திப்பு அருகே முன்னாள் ஊடகப் பிரிவு மாநில தலைவர் பிரசாத் தலைமையிலும், பெரவள்ளூர் அகரம் சந்திப்பு அருகே அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் கணேஷ் கண்ணன் தலைமையிலும், அயனாவரம் பஸ் பணிமனை அருகே திரு.வி.க நகர் தெற்கு மண்டல தலைவர் மணிவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்