தமிழக தொழில்துறை உலகளவில் கவனம் பெற்று வருகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு"எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நடைபெற்றது.

Update: 2022-11-08 09:17 GMT

சென்னை,

சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் "நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு"எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நாளை வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேற்றுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த திறன்மிகு மையங்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக, உற்பத்தித் துறையைவிட சேவைத்துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி பெற இயலும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை உற்பத்தித்துறை மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டிலுமே முன்னணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை நாம் பெற்றிட முடியும். எனவேதான், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக்கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும். டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திறன்மிகு மையம், "நான் முதல்வன்" திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த மையங்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மூலமாகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் மூலமாகவும், நமது மாநிலத்திற்கு அதிக காப்புரிமைகள் கிடைக்கும். எனவே, அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன், தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்திடும் சக்தியாகவும் இந்த திறன்மிகு மையங்கள் விளங்கிடும். தொழில் வளர்ச்சி-4.0 தொடர்பான நவீன தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இத்திறன்மிகு மையங்கள் செயல்படும் என்பதால், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறன் வெகுவாக மேம்படும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு எப்போதுமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில், துறைசார்ந்த பல கொள்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022-ஐ வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 10 ஆண்டு காலகட்டத்திற்குள், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்ற இலக்கை நாங்கள் இதன் மூலம் நிர்ணயித்திருக்கிறோம். அண்மைக் காலங்களில், டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆளில்லா விமானங்களை இயக்கிட ஆளில்லா விமானங்களை இயக்குபவர்கள் அல்லது ரிமோட் பைலட்டுகள் தேவை. ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி மற்றும் டி.இ. டிரோன் ஆகிய நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் இணைந்து பணியாற்றி, இந்த ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பினை மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ளது. அவற்றை இன்று காணொலிக்காட்சி வாயிலாகத் நான் தொடங்கி வைத்துள்ளேன்.

Tags:    

மேலும் செய்திகள்