சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையாக அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.
அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2 1/2 ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல தலைமுறைளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.