'பல்லுயிர் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' - அமைச்சர் ரகுபதி
பல்லுயிர் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கவிநாடு கம்மாயை தூர்வாரும் பணியை அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, தூர் வாரும் பணி மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நிறைவடைந்த பின், வெளிநாட்டு பறவைகள் வரும் இடமாகவும் இது மாறும் என்று கூறினார்.
மேலும் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான நிலங்களை கையக்கப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். தமிழகத்தில் காடுகளை வளர்ப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பல்லுயிர் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தற்போது காடுகள் இருக்கும் பரப்பளவு அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்கு மரங்கள் அகற்றப்பட்டாலும், அகற்றப்பட்ட மரங்களுக்கு நிகராக பத்து மடங்கு மரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தைல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.