கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.

Update: 2023-11-10 08:14 GMT

புதுடெல்லி,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், கூறியதாவது:

தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆர்.என்.ரவி முடக்குகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கூட அவர் கையெழுத்திடவில்லை. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார்.

2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசின் உரிமை மட்டுமல்ல, தனி நபரின் உரிமையும் பறிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை கவர்னர்களால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் வாதாடினார்கள்.

அவர்களிடம் நீதிபதிகள், 'தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாமா' என்று கேட்டனர். பின்னர் இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக கவர்னரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதன்பின் இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்று மத்திய அரசு வக்கீல்கள் ஆஜராக உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்