தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

Update: 2023-01-13 23:26 GMT

மீனம்பாக்கம்,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்து விட்டார். இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடியும் முன்பே சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறினார்.

இந்தநிலையில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, சட்டமன்றத்தில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தனர்.

கவர்னர் டெல்லி சென்றார்

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை 11.32 மணிக்கு பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் தனது 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று(சனிக்கிழமை) இரவு மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். கவர்னர் வருகையையொட்டி பழைய விமான நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தமிழக அரசு இல்லத்தில் கவர்னர்

டெல்லி சென்ற கவர்னர் பிற்பகல் வேளையில் தமிழக அரசு இல்லத்துக்கு வந்தார். அவருக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. கவர்னரோடு அவருடைய மனைவியும் வந்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்