தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும் 22ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.