சேலம் 8 வழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலை திட்டம் அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2022-08-31 23:43 GMT

மதுரை,

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக பெரும்பாலான மக்கள் 3 விதமான கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். சந்தை மதிப்பில் நிலத்திற்கு பணம் தர வேண்டும். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடத்தை விமான நிலையத்தை சுற்றியே வழங்க வேண்டும். நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம்.

அதனால்தான் அவர், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மார்க்கெட் வில்லையில் 3.5 மடங்கு பணம், விமான நிலையம் அருகிலேயே வீடு கட்டுவதற்கு இடம், அதே போல் நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை மக்களும் ஏற்று கொண்டு உள்ளனர். எதிர்ப்பு தெரிப்பவர்களிடம் சம்மதத்தை பெறுவோம்.

சாலைகள் விரிவு

சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்கும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்தபோது, எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிரி கிடையாது. பாதிக்கப்படுபவர்களை உரிய முறையில் அழைத்து பேச வேண்டும். அவர்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு தர வேண்டும் என்றார்.

நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. எனவே சாலைகளை விரிவுப்படுத்ததான் வேண்டும். அதற்காக நிலத்தை கையகப்படுத்த தான் வேண்டும்.

எதிரி கிடையாது

8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனாலும் அரசு அதில் கொள்கை முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. இந்த திட்டத்தை நான் வேண்டும் என்று சொல்வதாக சில செய்திகள் வருகிறது. நான் எங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.

இந்த திட்டத்தை தி.மு.க. அப்போது எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்று சொல்கிறீர்கள். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்