நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
நீர்நிலை உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததும், சட்டத்துக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும் உயிர் பலி ஏற்படுவதற்கு காரணம் என அந்தந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், சிறிய நீர் நிலைகளில் அந்தந்த கிராமங்களில் குழுக்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று கூறியுள்ளார்.