தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் ஆதாயப் பங்கு தொகை ரூ.8.63 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் ஆதாயப் பங்கு தொகை ரூ.8.63 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இக்கழகம் உற்பத்தி திறன் குறைந்த காப்பு காடுகள் மற்றும் சராசரி மழை பொழிவு குறைவாக உள்ள இடங்களில் உள்ள காப்பு காடுகளை குத்தகைக்கு எடுக்கிறது.
அங்கு முந்திரித் தோட்டங்களை எழுப்பி தொடர்ந்து பராமரித்து விற்பனை செய்தல், தைலமரத் தோட்டங்களை உற்பத்தி செய்து தொடர்ந்து பராமரித்து அறுவடை செய்து அதை கூழ்மர மற்றும் காகித ஆலை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்தல், வனப்பரப்புகளின் உற்பத்தித்தன்மையை அதிகப்படுத்துவது, ஊரக வேலைவாய்ப்பு வழங்குவது, மண்வளப் பாதுகாப்பு மற்றும் ஊரக மக்களின் விறகு மரத் தேவையை பூர்த்தி செய்வது ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இக்கழகம் தொடர்ந்து லாபத்தை ஈட்டி வருகிறது. தற்போது 2021-2022-ம் ஆண்டில் ரூ.28.77 கோடி நிகர இலாபத்தை ஈட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் 30 சதவீத ஆதாயப் பங்குத் தொகையான ரூ.8.63 கோடிக்கான வங்கி வரைவோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் யோகேஷ் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.