தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றாலும், தமிழக மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்வது மன வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-09-30 03:07 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மீனவர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்த இலங்கை கடற்படை நேற்று காலை மீண்டும் 17 தமிழக மீனவர்களை சிறைபிடித்ததோடு, அவர்களது இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி 17 மீனவர்கள் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் உயிர்த்தராஜ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் நெடுந்தீவு அருகே பால்க் விரிகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு மன்னார் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்றாலும், தமிழக மீனவர்களை பொறுத்தவரை பழைய நிலையே தொடர்வது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் துன்புறுத்தப்படுவதும், தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றத்தால் மிகப் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அமைதியின்மையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற தொடர் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மூலம், தமிழக மீனவர்களின் மத்தியில் ஓர் அச்சத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆனால் இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. இந்திய எல்லைக்குட்பட்ட பாரம்பரியமான இடங்களில் மின்பிடித் தொழிலை மேற்கொள்வது என்பது தமிழக மீனவர்களின் உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஒரு தேசியப் பிரச்சினையாகக் கருதி, தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை இலங்கை அதிபரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, இந்திய நாட்டின் வலுவான எதிர்ப்பினை தெரிவித்து, இனி வருங்காலங்களில் தமிழக மீனவர்கள் அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும், சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. அரசும் மத்திய அரசுக்குத் தேவையான தொடர் அழுத்தத்தினை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்