அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர் கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்து, 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து 907 கோடி ரூபாய்
கடந்த பட்ஜெட்டில் ( 2023-24) தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 37 ஆயிரத்து 540 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு பட்ஜெட்டில் (2024-25) தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 44 ஆயிரத்து 907 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
50 கோடி ரூபாய் செலவில் புராதன கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்
மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப்பணி
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி வழங்கவில்லை
2 பேரிடர்கள் ஏற்பட்டதால் மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு இன்னும் நிதி வழங்கவில்லை
500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தொழில்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் உயர்த்தப்படும்
பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை பூவிருந்தவல்லி - கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் - நிதிமந்திரி தங்கம் தென்னரசு
திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு