அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்
மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர் கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்து, 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.