மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களை தாசில்தார் ஆய்வு

திருவாரூர் பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களை தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

திருவாரூர் பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களை தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு கரையைக் கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என்றும், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கலெக்டர் உத்தரவு

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.நேற்று காலை முதல் மாவட்டத்தில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏற்கனவே கன மழையினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள், ஆறுகளில் உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடங்களில் அந்தந்த பகுதி தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

தாசில்தார் ஆய்வு

அதன்படி திருவாரூர் பகுதியில் கடந்த காலங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தாசில்தார் நக்கீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் திருவாரூர் அருகே உள்ள விஷ்ணு தோப்பு, சுந்தரவிளாகம் பகுதியை இணைக்கும் வாழவாய்க்கால் ஆற்றில் கனமழையால் உடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தாசில்தார் நக்கீரன் மழையில் குடைபிடித்தப்படி பார்வையிட்டு, முன்ஏற்பாடு பணிகளை மேற்கொண்டார்.

மேலும் இந்த பகுதி மக்களை சந்தித்து கனமழை பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களில் இடம் பெயர்ந்திடவும், அதற்கான பாதுகாப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

15 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

இதேபோல் திருவாரூர் ஓடம்போக்கி ஆற்று பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சட்டரஸ் அருகில் உள்ள ரெகுலேட்டர் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது குறித்தும்அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டதால் சரி செய்ய மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் சாக்குகள் மற்றும் 15 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மழை பாதிப்பு ஏற்படும் அனைத்து பகுதிகளும் கண்டறியப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்