ரோப் கார் அமைக்க 2 இடங்களில் ஆய்வு
ஊசிமலை காட்சி முனையில் இருந்து ரோப் கார் அமைப்பது குறித்து 2 இடங்களில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கூடலூர்
ஊசிமலை காட்சி முனையில் இருந்து ரோப் கார் அமைப்பது குறித்து 2 இடங்களில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ரோப் கார் திட்டம்
கூடலூர் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த ஊசிமலை காட்சி முனை பகுதியில் இருந்து ரோப் கார் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் மற்றும் சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளுடன் கூடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கூடலூர்-ஊட்டி சாலை 27-வது மைல் பகுதியில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் இருந்து பள்ளத்தாக்கு வழியாக மைசூர் சாலை மாக்கமூலா வரையும், காட்சி முனையில் இருந்து சில்வர் கிளவுட் பகுதி வரை என 2 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் பணிகள் மேற்கொள்வதற்காக மாநில சுற்றுலாத்துறை மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு திட்டம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சாத்தியக்கூறுகள்
இந்தநிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதற்கான பணிகள் அரியானாவில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதன் தலைமை பொறியாளர் நிதீஷ் குமார் தலைமையிலான குழுவினர் ஊசிமலை காட்சி முனை பகுதியில் ரோப் கார் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சில்வர் கிளவுட், மாக்கமூலா பகுதிகளில் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் ரோப் கார் திட்டம் அமையும் இடங்கள் குறித்த சாத்தியக்கூறுகள், திட்ட மதிப்பீடு போன்றவை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது. ஆய்வின் போது கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமா சங்கர், கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.