கால்நடைகளை வேட்டையாடும் புலி நடமாட்டம் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
கால்நடைகளை வேட்டையாடும் புலி நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் வனத்துறையினா் கண்காணித்தனா்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள சேஷநகர் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று அங்குள்ள ஆடு, மாடு, காவல் நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் தமிழ்நாடு-கர்நாடக மாநில வனத்துறையினர் 2 டிரோன் கேமராக்கள் மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அதேபோல் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அடர்ந்த வனப்பகுதியில் புலி விரட்டப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.