தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

Update: 2023-04-08 16:41 GMT

ஓடும் பஸ்சில் பெண் கொலை

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்த க.பங்களா பகுதியை சேர்ந்த கோபி மனைவி தமயந்தி (வயது 42). இவர், கடந்த 6-ந்தேதி நத்தம் உலுப்பக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது ஓடும் பஸ்சில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சொத்து தகராறில் கோபியின் அண்ணன் ராஜாங்கம், தமயந்தியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தமயந்தியை கொன்றவரை அடையாளம் காண்பதில் முதலில் லேசான தடுமாற்றம் இருந்தது. எனினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராஜாங்கத்தை கைது செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

அதேநேரம் தனியார் பஸ்சில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்தால் ராஜாங்கத்தை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து இருக்கலாம் என்பது போலீசாரின் எண்ணமாக இருந்தது. இதை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தனியார் பஸ்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். விபத்து தொடர்பாக விசாரிக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கும். எனவே பஸ்களின் முன்பகுதி, பின்பகுதி மற்றும் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பஸ்கள் செல்லும் வழித்தடங்களில் விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்