விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2022-07-30 10:38 GMT

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்த இடத்தினை கலெக்டர் செந்தில்ராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

அகதிகள் முகாமில் வீடுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இடங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 350 வீடுகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக 150 வீடுகளும், மாப்பிள்ளையூரணி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 52 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தாப்பாத்தி முகாமில் உள்ள 52 வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) முதல் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. தாப்பாத்தி முகாமில் இடம் பிரச்சினை உள்ளது. அதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டத்தில் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். மழைக்காலத்திற்கு முன்பாக 4 மாதங்களில் வீடு கட்டும் பணிகள் முடிக்கப்படும்.

உரங்கள் வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் மூலம் யூரியா, பொட்டாஷ் கிடைக்கிறது. உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. பாசிப்பயறு, உளுந்து சூரிய காந்தி விதைகளும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தாசில்தார் முத்துராமலிங்கம், எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்