விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்களை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்களை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி அருகில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது பாட்டில்கள் வீசப்பட்டு கலவரம் ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாமரைக்குளம்
திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சிலை சந்திப்பு பகுதி, அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கடந்த 2018-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்ட சமுத்திரம் காலனி அருகில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
அந்த பகுதியில் இந்த ஆண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் அவர் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் தாமரை குளம் வரை நேரில் சென்று பார்வையிட்டார். அந்த சமயத்தில் இரண்டு சிறுவர்கள் மொபட் ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்தனர். இதை கண்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கினார்.