பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆணை பிறப்பித்தார்.

Update: 2022-08-25 18:33 GMT

பாலியல் தொல்லை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 44). இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனை தொடர்ந்து அவர் போலீசாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயுதப்படையை சேர்ந்த திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவர் தனக்கு நிலுவையில் உள்ள ஊதிய பணப்பலன்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி ஹரிகரனை நேரில் சந்தித்து கூறினார். அதில் இருந்து அந்த பெண் போலீசுக்கு ஹரிகரன் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மிரட்டல்

மேலும் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் என்னை பற்றி புகார் கொடுத்தாயா? என்று அந்த பெண் போலீசை ஹரிகரன் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியிடம் புகார் தெரிவித்தார். அப்போதைய திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா விசாரணை நடத்தி, ஹரிகரனை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

இந்தநிலையில் டி.ஐ.ஜி. ராதிகா சென்னைக்கு பணியிட மாறுதலாகி சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற சரவணசுந்தர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கட்டாய ஓய்வு

ஏற்கனவே ஹரிகரன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அலுவலக பெண் உதவியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் இருந்தது. அந்த புகாரின்பேரில் விசாகா குழு நடத்திய விசாரணையின் முடிவில், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவரது ஊதிய உயர்வினை 2 ஆண்டு காலத்திற்கு ஒத்திவைத்து ஆணையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹரிகரன் மீதான பாலியல் புகார் குறித்த விசாகா கமிட்டி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகரனுக்கு தண்டனையாக கட்டாய ஓய்வு அளித்து அதிரடி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை ஹரிகரனுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்