கம்பம், கூடலூரில் சுட்டெரிக்கும் வெயிலால் கருகும் பயிர்கள்

கம்பம், கூடலூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் மானாவாரி பயிர்கள் கருகி வருகின்றன. பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-08-27 21:30 GMT

கம்பம், கூடலூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் மானாவாரி பயிர்கள் கருகி வருகின்றன. பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை

கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, கல்லுடைச்சான்பாறை, ஏகலூத்து, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் விவசாயிகள் மானாவாரியாக தட்டைப்பயறு, அவரை, மொச்சை, துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயிகள் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. பருவமழை பொய்த்து போனது. இதனால் மழையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல், வெயில் சுட்டெரித்து வருவதால் பயிர்கள் கருகி வருகின்றன. குறிப்பாக கூடலூரில் உள்ள நிலங்களில் சாகுபடி செய்திருந்த தட்டைப்பயறு செடிகள், தண்ணீரின்றி வளராமல் வாடி, கருகி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கருகும் பயிர்கள்

இதேபோல் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏகலூத்து, மணிகட்டிஆலமரம், புதுக்குளம், கம்பம்மெட்டு மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், எள்ளு, மொச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், வாட்டி வதைக்கும் வெயில் காரணமாகவும் பயிர்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வாடி, கருகி வருகின்றன. உழவு, களையெடுப்பு, மருந்து செலவு செய்து எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்