கோடைகால பயிற்சி வகுப்புகள்

திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள்

Update: 2023-05-11 18:45 GMT


திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

அரசு இசைப்பள்ளி

கோடைக்காலம் என்றாலே பெரும்பாலும் மாணவர்கள் ஊருக்கு செல்லுதல், மைதானங்களில் விளையாடுதல் என்று பொழுதினை கழிப்பார்கள். இன்னும் சிலர் டி.வி.பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது என்று நேரத்தை வீனடித்து வருகின்றனர். சிலர் இந்த விடுமுறை காலத்தை எப்படி நமக்கு பயனுள்ளபடி மாற்றுவது என்று முடிவு எடுத்து தட்டச்சு பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி, பேச்சு-ஆளுமை திறனுக்கான பயிற்சி, போட்டித்தேர்வுக்கான அரசு மற்றும் தனியார் பயிற்சிகளுக்கு செல்வார்கள்.

அதன்படி திருவாரூரில் உள்ள அரசு இசைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், குரலிசை, பரதநாட்டியம், பாடல், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள் திருவாரூர் கலைபண்பாட்டு துறை சார்பில் அரசு இசைப்பள்ளியில் தொடங்கியுள்ளது.

கல்வி ஊக்கத்தொகை

இந்த வகுப்பில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 5 வயது முதல்16 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி கூறுகையில், இந்த இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மிக சிறப்பாக 3 வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி, மாதந்தோறும் ரூ.400 கல்வி ஊக்கத்தொகை, இலவச பஸ் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ-மாணவிகள் சேர்க்கை

இந்த பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதஸ்வரம், தவில், தேவாரம், ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. இந்த இசைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது பயிற்சிகளை பெற்று வருகின்றனர். தற்போது இந்த ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. அரசு இசைப்பள்ளியில் சேர விருப்பமுள்ளவர்கள் பள்ளியை தொடர்பு கொண்டு சேர்ந்து கொள்ளலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்