நடப்பு பருவத்தில் பயிர்கள் செழிக்க கோடை உழவு செய்வது அவசியம்
நடப்பு பருவத்தில் பயிர்கள் செழிக்க கோடை உழவு செய்வது அவசியம் என வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
நடப்பு பருவத்தில் பயிர்கள் செழிக்க கோடை உழவு செய்து கொள்வது அவசியம் என கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை கால உழவு
மழைக்காலத்தில் செய்யும் உழவை விட, கோடைக்காலத்தில் செய்யும் உழவு தான் முக்கியமானது. மழைக்காலத்தில் போதுமான ஈரம் இருக்கும். அந்த ஈரத்தில் உழவு செய்யும்போது, மண்ணுக்குள் குளுமையான தன்மைதான் உருவாகும்.
ஆனால், கோடைக்காலத்தில் உழவு செய்யும்போது, வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்கு கிடைக்கும். இப்படி இரண்டும் கிடைக்கும்போது தான் மண்ணின் கட்டுமானம் பலப்படும். வயலில் மண்ணைப் புரட்டி விடும் போது, முதலில் மண் வெப்பமாகி, பிறகு குளிர வேண்டும். இதுதான் உழவியல் முறையில் கோடை உழவின் அடிப்படை தன்மை ஆகும்.
கோடை உழவு செய்யும் முறை
நிலத்தின் மேட்டு பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். 2-வது உழவு, குறுக்கு வசத்திலிருக்க வேண்டும். இப்படி நான்கு முறை உழவு செய்ய வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர் கோடாக உழவு செய்தால், மழை பெய்யும் போது மேட்டு பகுதியில் இருக்கும் சத்துகள் தாழ்வான பகுதிக்கு போய்விடும். குறுக்கு உழவு இருந்தால் தான் சத்துகள் ஆங்காங்கே தடுக்கப்படும். மழை நீரும் பூமிக்குள் இறங்கும்.
கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது சிவப்புக் கம்பளிப்புழு மற்றும் அதன் கூட்டுப்புழுக்களாகும். இவை கோடை உழவு செய்யும்போது அழிந்துவிடும்.
மண்புழுக்கள் தங்காது
மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர்ப் பகுதியில் வாழக்கூடிய அத்தனை நுண்ணுயிர்களுக்கும் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். கோடை உழவு, ஆழமான உழவு. உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை இவை இரண்டும்தான் கோடை உழவு செய்யும் கலப்பைகள்.
மழைக்காலத்தில் உழவு செய்யும்போது, ஈரப்பதம் இருப்பதால் சாதாரண உழவாக இருக்கும். கோடையில் தான் ஆழமாக உழ முடியும். ஒரு வயலில் தொடர்ந்து 5 ஆண்டுகள் கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பயிர்கள் செழிக்க...
கோடை உழவே செய்யாத ஒரு நிலத்தில் டன் டன்னாக மண்புழு உரத்தை கொட்டினாலும் மண்புழுக்களை பார்க்க முடியாது. எனவே கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பு பருவத்தில் பயிர்கள் செழிக்க அவசியம் கோடை உழவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.