கோடை விடுமுறை கூட்ட நெரிசல்:தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வலியுறுத்தல்
கோடை விடுமுறையை தொடர்ந்து, தென்மாவட்ட ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறையை தொடர்ந்து, தென்மாவட்ட ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் ரெயில்
கோடை விடுமுறை என்பதால் அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தென்மாவட்ட ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலால் நிரம்பி வழிகிறது. திருச்செந்தூர்-பாலக்காடு, செங்கோட்டை-சென்னை, நெல்லை-தாம்பரம் உள்ளிட்ட ரெயில்களில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரீமியம் தட்கலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான தென்மாவட்ட ரெயில்களில் வழக்கமான முன்பதிவில் காத்திருப்போர் பட்டியல் முடிந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த ரெயில்கள் வாரம் 4 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து மதுரை வழியாக தாதருக்கு ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் தென்மாவட்டத்தை சேர்ந்த மும்பை பகுதியில் வணிகம், பணி, தொழில் செய்து வருபவர்கள், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வருவதற்கும், அங்கு செல்லும் நடைமுறையை கொண்டுள்ளனர்.
மும்பை ரெயில்
ஆனால், ரெயில்களில் இருக்கை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை தமிழன ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் ரெயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்று கூறப்படுகிறது. பிரீமியம் தட்கலில் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் (வ.எண்.16351) 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் நெல்லை வருவதற்கு ஒரு நபருக்கு ரூ.4,800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 4 பேரை கொண்ட ஒரு குடும்பத்தினருக்கு சுமார் ரூ.15 ஆயிரம் டிக்கெட் கட்டணம் மட்டும் செலவாகிறது.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அயலக தமிழர் நல அமைச்சகத்தின் மூலம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.