ஏற்காட்டில் 46-வது கோடை விழா-மலர் கண்காட்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோடை விழா
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சீசன் களைகட்டி இருக்கும். ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்படி ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
2 அமைச்சர்கள்
இந்தாண்டு 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று மாலை ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
அவர்கள் அண்ணா பூங்காவில் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், தேனீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை பார்வையிட்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
5 லட்சம் பூக்கள்
ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் ரோஜா, ஹார்னேசன், டெய்சி உள்ளிட்ட பூக்களை கொண்டு சோட்டா பீம், தேனீ, முயல் ஆகியவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதன் முன்பு குழந்தைகள், பெரியவர்கள் நின்று தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுதவிர, 32 ஆயிரம் ரோஜா, அஸ்பராகஸ் போன்ற மலர்கள் கொண்டு டிராகன் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 35 ஆயிரம் மலர்களால் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன.
10 ஆயிரம் பூந்தொட்டிகள்
சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் கொய் மலர்களான ரோஜா, ஜெர்பிரா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா, சாமந்தி, அந்தூரியம், சொர்க்கத்து மலர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திலேயே வளர்க்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலையில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
நேற்று முழுவதும் அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.